இந்தியாவின் ஆபரேஷன் சாகர் பந்துவின் அரசியல் பரிமாணம்?
சர்வதேச அரசியலில் மனிதாபிமான உதவி நடவடிக்கைகள் மென் அதிகாரம் (soft power) மற்றும் புவிசார் அரசியல் (Geopolitics) என்பவற்றில் முக்கிய கருவியாக மாறிவிட்டது. குறிப்பாக உலக நாடுகள் தங்கள் அண்டை நாடுகளுடனான உறவுகள், பேரிடர் மேலாண்மை, பாதுகாப்பு, கடற்பாதுகாப்பு என்பன உதவி மற்றும் பரஸ்பர ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றதாக உள்ளது. இது இராஜதந்திர செயற்பாட்டிற்கான நகர்வாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது. இத்தகைய தன்மையினை வெளிப்படுத்தும் ஒன்றாகவே இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முதலிடம் கொள்கை (Neighborhood first policy) காணப்படுகின்றது. இலங்கையின் (நவம்பர் 28,29 2025) பல பகுதிகள் டித்வா (Cyclone Ditwah) புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட செயல்பாடானது பொருளாதார ஒத்துழைப்பைக் கடந்து இராஜதந்திர நகர்வுக்கு வழிகோலுகின்றது.இப்பின்ணனியில் இக்கட்டுரையும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் மூலம் பிராந்தியத்தில் நட்புறவை நிறுவுகிறதென்பதை தேடுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முதலிடக் கொள்கை பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் 2014ஆம் ஆண்டு முதன்முதலில் பதவியேற்றபோது முறையான வெளியுறவுக் கொள்கையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அது நடைமுறைப்படுத்தப்பட்டது. 2014இல் மாலைதீவில் குடிநீர் நெருக்கடி ஏற்பட்ட போது இந்தியா Operation Neer மூலம் குடிநீர் மற்றும் தொழில்நுட்ப உதவி உடனடியாக அனுப்பியது.2015ல் நேபாளத்தில் நிலநடுக்கத்தின் போது ஆபரேஷன் மைத்ரி மூலம் இந்தியா உடனடி மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கியது. 2017ல் வங்களாதேஷில் ரோஹிங்கியா அகதிகளுக்கு Operation Insaniyat என்ற பெயரில் உணவு, மருத்துவ, தங்குமிடம் பொருட்களை வழங்கியது. 2017ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் போது கடற்படை மூலம் உதவிகளை வழங்கியது. 2020–2021 இல் COVID–19 காலத்தில் நேபாளம்,இலங்கை, வங்களாதேஷ், பூட்டான், மாலைத்தீவு, மியன்மார் போன்ற அண்டை நாடுகளுக்கு உதவியாக தடுப்பூசிகள்,ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் அனுப்பியது. 2022-2023 காலப்பகுதியில் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது, சுமார் 04 பில்லியன் அ.டொ. மதிப்பிலான நிதி உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது. இறுதியாக 2025 ஆம் ஆண்டு டித்வா புயலின் போது ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற பெயரில் இந்தியா தனது விமான படைகள் (IAF) மூலம் C-130 மற்றும் IL-76 போன்ற கொள்திறன் விமானங்களை பயன்படுத்தி 12 -21 தொன்கள் அத்தியாவசிய உதவிப் பொருட்களையும் இந்திய கடற்படை (Indian Navy) கப்பல்களான INSVikrant மற்றும் INS Udayagiri மூலம் 4.5 தொன் உலர் உணவுப் பொருட்களையும் இரண்டு தொன் புதிய உணவுப் பொருட்களையும் மற்றும் அவசர நிவாரண பொருட்களும் கூட்டமாக அனுப்பப்பட்டன. இந்திய நாட்டு மனிதாபிமான மீட்பு படை (NDRF) மற்றும் அவசர மீட்பு உபகரணங்களுடன் கூடிய குழுக்கள்இந்தியவிமானப்படையின் IL-76 விமானத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க அனுப்பப்பட்டது.இந்த மனிதாபிமான,நிவாரண உதவிகள் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல் உடனடிச் செயல்பாடுகள் மற்றும் நிலைத்தன்மையுடன் அண்டை நாடுகளுக்கு ஆதரவு அளிக்கும் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
வெளியுறவுக்கொள்கை ஆய்வாளரில் ஒருவரான ராஜமோகன், மனிதாபிமான உதவியும் பேரிடர் நிவாரணமும் (HADR) என்பது நவீன இராஜதந்திரத்தின் மிகவும் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும். இராணுவக் கப்பல்களை போர் அச்சுறுத்தல் இல்லாமல் அத்தியாவசிய உதவிகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்துவது ஒரு நாடு தனது அண்டை நாடுகளின் மீதான தனது உறுதியான பிணைப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்கான சிறந்த வழியாகும். என்று கூறியுள்ளார். இது விடயத்தை ஆழமாக நோக்குவது அவசியமானது.
முதலாவதாக, ஆபரேஷன் சாகர் பந்து என்பது இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை வெறும் பேச்சுவார்த்தை மேசைகளில் மட்டுமல்ல துயரத்தில் இருக்கும் அண்டை நாடுகளின் களங்களிலும் உடனடிச் செயல்பாடு காட்டுகிறது என்பதை நிரூபித்தது. இலங்கை அரசாங்கத்திடமிருந்து அதிகாரப்பூர்வக் கோரிக்கை வந்த உடனேயே எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ் விக்ராந்த் போன்ற மிக முக்கியமான நகர்வுகளை பேரிடர் செயற்பாட்டடிற்கு ஈடுபடுத்தியது அதன் இராஜதந்திர உறுதிப்பாட்டின் ஆழத்தைக் காட்டுகிறது. இந்த விரைவான பதிலளிப்பு நெருக்கடி காலத்தில் பிராந்தியத்தில் முதல் பதிலளிக்கும் நாடாக (First Responder) இந்தியா மட்டுமே உள்ளது என்ற வலுவான இராஜதந்திரச் சமிக்ஞையை உலகிற்கு அனுப்பியது. இதுவே இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முதலிடக்; கொள்கையின் வெற்றிகரமான செயல்வடிவமாகும்.
இரண்டாவதாக,இராஜதந்திரத்தின் மூலோபாய முதலீடு என்ற கண்ணோட்டத்தில் இந்த நடவடிக்கையைக் காணலாம். இலங்கையில் சீனா உள்ளிட்ட மற்ற உலக சக்திகள் தங்கள் பொருளாதார மற்றும் மூலோபாய முதலீடுகளை ஆழப்படுத்தி வைத்திருக்கும் சூழ்நிலையில் அந்த நாடுகள் உதவ முன் இந்தியாவின் இந்தத் துரித மனிதாபிமான நடவடிக்கை நெருக்கடி காலங்களில் நம்பகமான மற்றும் உதவிக்கரம் நீட்டும் நண்பனாக இந்தியா மட்டுமே உள்ளது என்ற கருத்தை ஆழமாக நிறுவியது. வெறும் நீண்ட காலக் கடன் ஒப்பந்தங்கள் அல்லது முதலீடுகளுக்கு அப்பால் மனித உயிர்களைக் காக்கும் உயரிய உதவி மூலம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நல்லெண்ண மூலதனத்தை திரட்டுகிறது. இது பூகோள அரசியல் போட்டியில் இந்தியாவின் செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கு அத்தியாவசியமான இராஜதந்திரச் செயல்பாடாகும்.
மூன்றாவதாக, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (SAGAR) என்ற இந்தியாவின் பிராந்தியக் கண்ணோட்டத்தின் செயல்விளக்கத்தை இந்த நடவடிக்கை வழங்கியது. சாகர் (SAGAR -Security and Growth for All in the Region) என்ற இந்தியாவின் பார்வை இந்திய கடலுக்கு சொந்தமான பிராந்தியத்தில் உள்ள நாடுகளிள் மீதான பாதுகாப்பு, உதவி, பொறுப்பு மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதை வலியுறுத்துகிறது. அண்டை நாட்டில் ஏற்படும் ஸ்திரமின்மை, கடல்சார் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் சொந்த நலன்களையும் பாதிக்கக்கூடியது. இலங்கைக்கு உடனடியாக உதவிகளை வழங்குவதன் மூலம், இந்தியா தனது பிராந்தியப் பாதுகாப்புக் கடமையை நிறைவேற்றுகிறது.
நான்காவதாக, வெளியுறவு அரசியலில் இருந்து விலகிச் செயல்படும் முதிர்ச்சிகரமான இராஜதந்திரக் கண்ணோட்டத்தை இந்தியா வெளிப்படுத்தியது. இலங்கையின் உள்நாட்டு அரசியல்; பற்றி கவனம் கொள்ளாமல் இந்திய அரசு தனது கொள்கையின் அடிப்படையிலேயே உதவியின் தாற்பரியத்தை வெளிப்படுத்தியது. பாதிக்கப்பட்ட மக்களிடையே தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்களை அனுப்புவது இந்தியா பிராந்தியத்தில் ஒரு சமநிலையான மற்றும் பாரபட்சமற்ற தலைமைப் பண்பைக் கொண்டுள்ளது என்ற செய்தியை உறுதியாக நிலைநிறுத்தியது. இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துகிற ஒன்றாக காணப்படுகின்றது.
ஐந்தாவதாக, கூட்டுறவின் பிணைப்பை வலுப்படுத்துதல் என்ற இராஜதந்திர நோக்கத்தை ஆபரேஷன் சாகர் பந்து வெற்றிகரமாகச் சாதித்தது. இந்தியக் கடற்படை மற்றும் விமானப்படையினர் இலங்கை-பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டனர். இந்த ஒருங்கிணைந்த செயல்பாடு, எதிர்காலத்தில் கூட்டுப் பாதுகாப்புப் பயிற்சிகள் தகவல் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர உதவிகள் ஆகியவற்றுக்கான ஒரு செயல்பாட்டு ஒத்திசைவை உருவாக்குகிறது. இதுபோன்ற மனிதாபிமானச் செயல்பாடுகள் மூலம் இராஜதந்திர அளவில் உறவுகள் வலுப்படும்போது பிராந்தியத்தில் உள்ள கூட்டுப்பாதுகாப்பு அமைப்புகள் வலுப்பெறுகின்றன இது அத்தியாவசியமானது. இந்தியாவின் =நீண்டகால இராஜதந்திர இலக்கிற்கு அத்தியாவசியமானது.
எனவே இந்தியாவின் செயல்பாடுகள் வெறும் பொருளாதார ரீதியிலான சலுகைகளை மட்டும் கொண்டிருக்கவில்லை. மாறாக மனிதாபிமானம், பாதுகாப்பு மற்றும் அண்டை நாடுகளின் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் ஒரு முழுமையான இராஜதந்திர அணுகுமுறையாகும், இது இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிலைநிறுத்தும் வலுவை இந்தியாவுக்கு கொடுத்துள்ளது.. இந்த அணுகுமுறை இந்தியா ஒரு நம்பகமான நண்பன் என்பதை நிலைநிறுத்துவதோடு, நீண்ட காலப் பூகோள அரசியல் இலக்குகளுக்கும் Soft power மூலமான செயல்பாட்டுக்கு அடித்தளமிடுகிறதாகத் தெரிகிறது. இவ்வாறு 2009 போரிலும் இந்தியா இலங்கைக்கு பாரிய உதவிகளை புரிந்தது. ஆனால் இறுதியில் சீனா வெற்றிடத்தை நிரப்பியது என்ற எச்சரிக்கை அவசியமானது.
தில்லையம்பலம் டிலக்சன்.
( இக்கட்டுரை தினக்குரலில் 9 December 2025 அன்று கருத்துக்களம் பகுதியில் பிரசுரிக்கப்பட்டது.)
(…நன்றி தினக்குரல்)
Comments
Post a Comment