மலையகத்திற்கான மாற்றுத்திட்டங்களும் அரச பலவீனத்தின் தொடர்ச்சியும்!

நவம்பர் இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட டிட்வா புயல் இதுவரை காலமும் இல்லாத அளவிற்கு பேரழிவுகளையும், மறக்கமுடியாத நினைவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த புயலால் இலங்கை பூராகவும் 630இற்கு மேற்பட்டோர் உயி ரிழந்ததாகவும் 200இற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் 5300இற்கு மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும் 86800இற்கு மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை யம் அறிவித்தது. இதில் அரைவாசிக்கு மேற்பட்டோர் மலையக மண்சரிவினால் உயிரிழந்தும் காணாமலும் வீடுகளை இழந்தும் உள்ளனர். இக்கட்டுரையும் மலையக மக்களின் அனர்த்த பாதிப் புக்களுக்கு தீர்வான நகர்வுகள் பற்றிய தேடலை முதன்மைப்படுத்துகிறது.

மலையக மக்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தோட்டத் தொழிலுக்காக இந்தியாவில் இருந்து அழைத்துவரப் பட்டவர்கள். இன்று வரை இலங்கையில் குடியுரிமையின்மை, காணி, வீடு இன்மை, தோட்ட தொழிலுக்கான சரியான ஊதியமின்மை, தமது தேவையை மேற்கொள்ள தாய்மொழி சிக்கல், அரச அடக்குறை, புறக்கணிப்பு, பாரபட்சம் என அரசியல் துயரங்களை அனுபவிக்கும் நிலையிலும் இயற்கை அனர்த் தங்கள் அத்துயரத்திற்கு வலுச்சேர்க்கின்றது. இந்த இயற்கை பேரழிவுகள் ஏற்படுவதற்கான காரணம் இயற்கை மட்டுமே என கூற முடியாது பல தசாப்தங்களாக திட்டமிடப்படாத குடியேற்றங்களும், புறக்கணிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளும், தோட்டங்களில் சரியான முறையில் அமைக்கப்படாத வடிகால் அமைப்புகளும், இயற்கை அனர்த்தங்களுக்கு தாக்கு பிடிக்க முடியாத லயன் குடியிருப்புக்களும் ஏற்படுத்திய நெருக்கடிகளே முக்கிய காரணமாகும். இத்தகைய அரசியல் தவறுகள் சார்ந்த புரிதல்கள் ஆராயப்பட வேண்டியவையாகும்.


முதலாவதாக, வீடமைப்பு திட்ட தீர்வு முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அமைக்கப்படும் புதிய குடியிருப்புகள் வெறும் தனி வீடுகளாக மட்டுமில்லாமல் புவியியல் ஆய்வு சான்றிதழின் அடிப்படையில் டிட்வா போன்ற புயலின் வேகத்தையும் கனமழையையும் மற்றும் மண்சரிவையும் தாங்க கூடிய விஞ்ஞான பூர்வமான தொழிநுட்பங்களுடன் கூடிய ஆழமான அத்திவாரங்கள், தடுப்பு சுவர்கள் மற்றும் புயலை தாங்க கூடிய கூரை அமைப்புக்களுடன் வீடு கட்டப்பட வேண்டும். ஜப்பான் போன்ற நாடுகள் நிலநடுக்கம், சுனாமி, சூறாவளிக்கு உட்படுவதால் இவற்றிலிருத்து பாதுகாப்பு பெற நவீன தொழிநுட்பங்களுடன் கூடிய வீடுகளை கட்டப்பட்டுள்ளது. இந்த நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தி மலையக மக்களுக்கு அரசாங்கம் புதிய வீடுகளை வழங்கவேண்டும்.

இரண்டாவதாக அரசியல் தலைமைத்துவங்கள் வழங்க மறுக்கும் இரண்டு முக்கியமான தீர்வுகளும், ஏனைய சில முக்கிய தீர்வுகளும் போதுமானது. முதலாவது தீர்வாக மலையக மக்கள் அபாய வலயங்களில் இருந்து வெளியேற்றப்பட்டும், தோட்ட உரிமையாளர்களின் சொந்த காணிகளில் இருந்து வெளியேற்றப்படும் சட்ட ரீதியான உறுதி பத்திரங்களுடன் கூடிய புதிய பாதுகாப்பான நிலங்களில் குடியேற்றப்பட வேண்டும். தோட்ட நிர்வாகங்களின் தலையீடு இன்றி பிம்சவிய போன்ற சட்டக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட காணி உறுதி பத்திரங்களுடன் கூடிய நிலங்கள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, ஒரு குடும்பத்திற்கு 7 முதல் 10 பேர்ச்சஸ் வரையான நிலத்தை வழங்குவதன் மூலம் மட்டுமே அவர்கள் சுயமரியாதையுடன் வாழும் உளவியல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

மூன்றாவதாக, அரசியல் தலையீடுகளை தடுக்கும் பொருட்டு தேசியகட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் அதிகாரங்களை உயர்த்தி அபாய வலயங்களில் உள்ள குடியிருப்புகளை பலவந்தமாக வெளியேற்றவும் மீள் குடியேற்றத்தை உறுதி செய்யவும் சட்டரீதியாக அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரு சுயாதீன அனர்த்தஒழுங்குபடுத்தல் அதிகார சபை நிறுவப்படவேண்டும். 2014 அக்டோபர் பதுளை மாவட்ட ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மீரியபெத்த தோட்டத்தில் கனமழை காரணமாக மண் சரிந்ததில் 16 லயன் குடியிருப்புக்கள் மண்ணுக்குள் புதையுண்டன. இதில் 37க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். NBRO இது தொடர்பில் முன்னரே இது அபாய பிரதேசமாக அறிவித்திருந்த நிலையில் தோட்ட நிர்வாகமும் சில உள்ளுர் அரசியல் தலைமைகளும் அலட்சியம் செய்தமையினால் இந்த நிலை ஏற்பட்டது. இதே நிலைமையைத்தான் டித்வா புயலும் மலையகத்தில் ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலைமைகளில் இருந்து மலையக மக்களை பாதுகாப்பது என்றால் சுயாதீன அனர்த்த ஒழுங்குபடுத்தல் அதிகாரி சபை அமைக்கப்பட்டு அதற்கு அதிகாரங்கள் எந்த தடையும் இன்றி வழங்கப்படுதல் வேண்டும்.

நான்காவதாக, பேரழிவு ஏற்படும் போது தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் காலதாமதம் மற்றும் மொழியியல் தடைகளே அதிக உயிரிழப்புக்களுக்கும், பேரழிவுகளுக்கும் காரணமாகின் றன. தற்போது உள்ள தேசிய எச்சரிக்கை முறையானது பெரும்பாலும் கொழும்பை மையப்படுத்திய சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் வழங்கப்படுகின்றது. தேசிய மொழியில் வழங்கப்படும் எச்சரிக்கைகள், மொழி பெயர்ப்புக்கள் காலதாமதம் அடைவதன் காரணமாக தோட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களைச் சென்றடைவது காலதாமதமாகின்றன. வானொலி, தொலைக்காட்சி மூலமாக எச்சரிக்கைகள் தோட்டப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் போது அது பயனற்ற ஒன்றாக போகின்றன. இத்தகைய சிக்கலையே டித்வா புயல் நேரத்திலும் மலையகம் எதிர்கொண்டது. இந்த சிக்கல்களை தீர்க்க மலையக மக்களின் தாய் மொழியில் எச்சரிக்கைகளை வழங்க வேண்டும். அனைத்து முகாமைத்துவ நிலையங்களும் (DMC, NBRO) புயல் எச்சரிக்கை மற்றும் மண்சரிவு குறித்த துல்லியமான தரப்படுத்தப்பட்ட தமிழ் மொழி மூலமான செய்தி தயாரிப்புக்களை வழங்க வேண்டும். மாவட்ட செயலகங்கள் தேசிய செய்தியை பெற்று புவியியல் நிலைமைகளுக்கேற்ப உள்ளுர் மொழி நடையில் செய்திகளை மக்களிடம் அனுப்பு தல்வேண்டும். தோட்ட பொறுப்பாளர்கள், கிராமிய செயற்பாட்டு குழுக்கள், பிராந்தியச் செய்தியைப் பெற்றவுடன் 24 மணி நேரமும் செயல்படும் பிராந்திய எச்சரிக்கை மையங்கள் மூலமாக உடனடியாக மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தல் வேண்டும். மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் பேட்டரியில்  இயங்கும் ஒலிபெருக்கி அமைப்புகள் (Sirens) ஒவ்வொரு லயன் தொடர் மற்றும் கிராமப் பகுதிகளிலும் நிறுவப்படவேண்டும். புயலின் போது மக்களை உடனடியாக வெளியேறச் செய்ய இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு தோட்டப் பிரிவிலும் அனர்த்தத்தின்போது மக்களை ஒருங்கிணைத்து வெளியேற்ற, தமிழ் பேசும் தன்னார்வுலர்களுக்கு விசேடப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தோட்டத்தின் புலனக்குழுக்கள் மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் அபாய எச்சரிக்கைச் செய்திகள் உடனடியாகப் பகிரப்பட வேண்டும். இந்த முறைமை மலையக மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதில் உள்ள மொழியியல் தடையை நிரந்தரமாக நீக்குவதுடன், அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவத்தை இன்னும் பொறுப்புள்ளதாகவும் மனித நேயம் மிக்கதாகவும் மாற்றும்.

எனவே டித்வா புயல் ஏற்படுத்திய கோரமான பேரழிவு மலையக மக்களின் பிரச்சினை வெறும் பருவமழை சார்ந்த தல்ல, அது நீண்டகால அரசியல் அலட்சியம் மற்றும் நிர்வாகத் தவறுகளால் கட்ட மைக்கப்பட்ட ஒரு நெருக்கடி என்பதைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது. இந்தத் துயரம் நமக்கு ஒரு தெளிவான பாடத் தைக் கற்பித்துள்ளது. மனித உயிர்க ளைக் காப்பதில் தற்காலிகச் சமாதானங்களுக்கு இடமில்லை. நிரந்தர தீர்வுகளே சிறப்பானது. லயன் அறைகளிலிருந்து வெளியேறி சட்டபூர்வமான காணி உரிமையுடன் புயலைத் தாங்கக்கூடிய வீடுகளில் வாழும் உரிமை இந்த மக்களின் அடிப்படை மனித உரிமையாகும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

தில்லையம்பலம் டிலக்சன்-

(இக்கட்டுரை 12 December 2025 தினக்குரல் பத்திரிகையில் கருத்துக்களம் பகுதியில் பிரசுரிக்கப்பட்டது.)

(...நன்றி தினக்குரல்…)

Comments

Popular posts from this blog

இந்திய -இலங்கை மீனவர் பிரச்சினையும் பூகோள அரசியல் யதார்த்தமும் !

இந்தியாவின் ஆபரேஷன் சாகர் பந்துவின் அரசியல் பரிமாணம்?