இந்திய -இலங்கை மீனவர் பிரச்சினையும் பூகோள அரசியல் யதார்த்தமும் !
இந்தியா-இலங்கை இடையேயான மீனவர் பிரச்சினையானது பல தசாப்தங்களாக நீட்சியடைந்த ஒன்றாக காணப்படுதின்றது. தற்காலத்தில் இலங்கையின் வட பகுதியில் போராட்டமாக மாறியிருகின்றது. 12.12.2025 யாழ்பாணத்தில் மீனவர் சங்கங்கள் மற்றும் மீனவர்கள், இந்திய மீனவர்கள் அத்துமீறி தமது கடற்பரப்பிற்குள் மீன்பிடிப்பதாகவும் தமது மீன்பிடி வலைகளை அழிப்பதாகவும், சூறையாடுவதாகவும் கூறி கடல் தொழில் நீரியல் வள திணைக்களத்தின் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தின் போது கடல் தொழில் நீரியல் வள திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் கிரிஷ்னன் அகிலனிடமும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடமும் தமது பிரச்சினை அடங்கிய கோரிக்கை மகஜரை கையழித்தனர். இதன்போது தமது வளத்தை இந்திய மீனவர்கள் இழுவை, மடி படகை பயன்படுத்தி சுரண்டுவதாகவும், தங்களுடைய தொழிலையும் வாழ்வாதாரத்தையும் அழிப்பதாகவும் தெரிவித்தனர். இந்த ஆர்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த என்.பி.பி உறுப்பினர் யாழ்பாணத்தில் இருக்கும் இந்திய துணை தூதரகம் மீனவர் பிரச்சினை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இந்த தூதரகம் யாழ்பாணத்திற்கு தேவையில்லாதது என்றும் இந்த தூதரகம் யாழ்பாணத்தில் இருப்பதென்றால் இந்திய மீனவர்கள் இலங்கை பகுதிக்கு அத்துமீறி நுழைவதை தடுக்க இலங்கை அரசுக்கு அவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தும் உரிமையை தூதரகம் வழங்க வேண்டும் என கூறினார் மற்றும் இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்றால் 5000-10000 மக்களை ஒன்று திரட்டி இந்திய துணை தூதரகத்தை முற்றாக அகற்றுவதாகவும் அவ்விடத்திற்கு அமெரிக்கா அல்லது சீனாவை கொண்டுவந்து அமர்துவதாக கூறுகின்னார்.இந்த சூழல் இந்தியாவிற்கு தற்போது இராஜதந்திர சிக்கலாகவும் பூகோள அரசியல் சவாலகவும் உருவாகியுள்ளது. இக்கட்டுரையும் மீனவர்கள் மற்றும் என்.பி.பி. உறுப்பினர் கருத்தின் அரசியல் பின்னணியை தேடுவதாக அமைகின்றது.
2025 நவம்பர் இறுதியில் ஏற்பட்ட டிட்வா புயலின் போது இலங்கை பேரழிவிற்கு உட்பட்டது. இந்த சூழ்நிலையில் இந்தியா, ஆபரேசன் சாகர் பந்து என்ற பெயரில் 73.5 மெட்ரிக் தொன் மனிதாபிமான உதவியையும், மருத்துவ பொருட்களையும், தற்காலிக பாலங்களையும், NDRF மீட்பு குழுக்களையும், இந்திய மத்திய அரசு வழங்கியது. அதே நேரத்தில் தமிழ் நாட்டு அரசும் 950 மெட்ரிக் தொன் உதவி பொருட்களை வழங்கியது. இப்படியான சூழ்நிலையில் இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினையும் சமகாலத்தில் இலங்கையின் வடக்கு பகுதியில் தலைதூக்கியுள்ளது. இதை ஆளமாக புரிந்து கொள்வது அவசியமானது.
முதலாவதாக, இந்தியா இலங்கையை கையாளுவதற்கு பயன்படுத்தும் மிக பிரதானமான கருவி வடக்கை மையப் படுத்திய தமிழ் மக்களின் பிரச்சினையை அடிப்படையாக கொண்டே காணப்படுகின்றது. அதாவது இலங்கையை தனது பிடிக்குள் வைத்திருக்கும் நோக்கோடு விடுதலை குழுக்களுக்கு ஆயுதம், பயிற்சி, ஆதரவு என இலங்கை அரசுக்கு எதிராக போராட வைத்தது. இந்த போராட்டத்தில் இந்தியா தமிழீழத்திற்கிடையிலான உறவு பல சிக்கல்களை கொண்டதாக இருந்தது. போர் முடிந்த 2009ன் பின்னர் வடக்கில் அதிகளவு செல்வாக்கு செலுத்தும் சக்தியாக இந்தியா இன்று வரையும் நிலைத்து இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் ஒரு இந்திய துணை தூதரகத்தை நிறுவும் அளவிற்கு இந்தியாவின் செல்வாக்கு காணப்படுகின் றது. இங்கு இருந்து வடக்கில் அனைத்தையும் கையாளும் சக்தியாக அதாவது அரசியல் மட்டுமல்லாமல் வடக்கிற்கான அபிவிருத்தி திட்டங்கள், கலாசார மையங்கள், கலை நிகழ்வுகள், புலமையாளர்கள் ஊடாக நிகழ்வுகள் நடத்தும் விடயங்கள் என அனைத்தையும் தந்துரோபாயமாகவும் நுணுக்கமாகவும் கையாளுகிறது. இவ்வாறான விடயங்களை சிறப்பாக, நுணுக்கமாக கையாளும் இந்தியா பல தசாப்தங்களாக நடைபெறும் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு இதுவரை காலமும் தீர்வு காண தவறிவிட்டது. இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசு, தமிழ்நாட்டு அரசு, வெளியுறவு அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகள் தமிழ்நாட்டு மீனவ சங்கங்கள் என எல்லாவற்றுடனும் பேச்சுவார்த்தைகள் நடந்தும் இதற்கான எந்த தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் இந்தியாவின் ஆதிக்கம் காணப்படும் வடக்கில் இந்தியாவிற்கெதிராகவும் இந்திய துணைத் தூதரகத்திற்கெதிராகவும் போராட்டம் வெடித்திருப்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய சாவாலாக மாறியுள்ளது.
இரண்டாவதாக இந்தியா இலங்கைக்கான மிக நெருங்கிய அண்டை நாடாகவும், பிராந்திய வல்லரசாகவும் உள்ளது. வரலாற்று ரீதியாக இலங்கையின் அரசாங்கங்கள் (பெரும்பாலும் தெற்கில் இருந்து ஆளும் கட்சிகள்) இந்தியாவின் பிராந்திய ஆதிக்கம் தங்களைக் கட்டுப்படுத்துவதைத் தவிர்க்க அதற்கு எதிராக ஒரு சமநிலைச் சக்தியை நாடும் வழக்கத்தைக் கொண்டுள்ளன. இந்த சமநிலைச் சக்தியாகவே பெரும்பாலும் சீனா மற்றும் சில சமயங்களில் மேற்கத்திய நாடுகள் பார்க்கப்படுகின்றன. இதற்கான ஆரம்பமாக கடந்த பல ஆண்டுகளாக சீனா இவங்கையில் துறைமுகங்கள் (அம்பாந்தோட்டை). நெடுஞ்சாலைகள் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் போன்ற பாரிய உள்கட்டமைப்புத்திட்டங்களில் பில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடுகள், பொருளாதார நெருக்கடியின் மத்தியில் கூட, இலங்கைக்கு சீனாவின் நிதி மற்றும் பொருளாதார வலிமையின் மீது ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. ஏற்னவே இந்தியா மற்றும் சீனா பகைமைநாடுகள் இந்த நிலையில் சீனா இலங்கையில் உட்கட்டமைப்புக்களில் செல்வாக்கு செலுத்துவது இந்தியாவிற்கு மிக பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த நிலையில் இந்திய இழுவை மடிப் படகுகள் கடற்பரப்பைச் சூறையாடி வளத்தைப் பறிக்கின்றன என்று வடக்கு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் என்.பி.பி உறுப்பினர் சீனாவைக் கொண்டு வடக்கில் அமர்த்துவோம் என குறிப்பிடுவது, பொருளாதார ரீதியாகவும், உள்கட்டமைப்பு ரீதியாகவும் வலுவான ஒரு புதிய கூட்டாளியைக் கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பைக் காட்டுகிறது. இந்த வடக்கு பிராந்தியத்தில் இந்தியா தனது அரசியல் மூலதனத்தை இழந்தால் அந்த வெற்றிடத்தை நிரப்ப சீனா தயாராக இருக்கிறது என்ற புவிசார் அரசியல் உண்மையை இது பிரதிபலிக்கிறது.இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பூகோள அரசியல் சிக்கலை உருவாக்கியுள்ளது.
மூன்றாவதாக சமகாலத்தில் இலங்கை எதிர் கொண்ட டிட்வா புயலின் பேரிடரில் இலங்கை அரசு மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக இந்திய பிரதமர் ஆபரேசன் சாகர் பந்து என்ற பேரில் கடற்படை,விமானபடை, மீட்பு குழுக்கள், மனிதாபினான உதவிகள் என அடுத்தடுத்து இலங்கைக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்கியது. இந்திய இராணுவம் தங்கள் நாட்டு சீருடைகளோடு இலங்கை பேரிடர் பகுதிக்குள் மீட்பு பணிகள், மனிதாபிமான உதவி நடவடிக்கைகள் என அனைத்து விடயங்களையும் செய்து கொண்டிருந்தன. இந்த நிலையை பார்த்த இலங்கையின் மற்ற நட்பு நாடுகளான சீனா, பாகிஸ்தான் மற்றும் மற்ற நாடுகளும் இலங்கைக்கு உதவிகளை வழங்கின. இந்திய இராணுவம் இலங்கை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தற்போது நிலைகொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் இந்தியாவிற்கெதிரான போராட்டம் வடக்கில் வெடித்திருப்பது மிகப்பெரிய சவாலாக இந்தியாவிற்கு அமைகின்றது. டிட்வா புயலின் போது இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவி நட்புறவின் சிறந்த அடையாளமாகக் கருதப்பட்டாலும், வடக்கு மீனவர்கள் அதை மறுத்து, எங்கள் வளங்களைச் சூறையாடிச் சேர்த்த பணத்தையே திரும்ப உதவியாக இந்தியா வளங்குகின்றது என்று விமர்சிக்கின்றனர். இந்தப் பின்னணியில் இந்தியாவை ஒரு உதவி செய்யும் அண்டை நாடாக அல்லாமல் வளங்களைச் சுரண்டும் சக்தியாகப் பார்க்கும் மனநிலையை இந்த சூழ்நிலை உருவாக்கியுள்ளது. இது இந்தியாவின் எதிரி நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்தகூடிய சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பூகோள சவாலை வழங்கும்.
நான்காவதாக இந்தியா அமெரிக்காவிற் கிடையிலான உறவானது ஆரம்பத்தில் நட்பு ரீதியான நல்ல உறவாக காணப்பட்டது. ஆனால் 2025 டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் வரி விதிப்புக்கொள்கையானது இந்திய அமெரிக்காவிற்கிடையிலான உறவில் விரிசலை தற்காலத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரஸ்யாவிற்கிடையிலான உறவு அதிகரிப்பததும் இதற்கான பிரதான காரணமாக அமைகின்றது. இந்திய இராணுவங்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் பாலங்களை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது இந்த நிலையில் வடக்கிலும் பாலம் புனரமைப்பு பணியில் இந்திய இராணுவம் ஈடுபட்டது. இந்த சூழ்நிலையில் அமெரிக்கா இலங்கைக்கு உதவுவதற்காக C-130 இரண்டு விமானங்களையும் இராணுவத்தையும் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் யாழ்பாண பலாலி விமான நிலையத்தில் அதிக திறன் கொண்ட பெரிய விமானங்களை தரையிறக்க முடியாது என குறிப்பிட்ட நிலையில் பேரிடர் விமானங் களை அமெரிக்க மனிதாபிமான உதவி பொருட்களுடன் எந்தவித தடங்கலும் இன்றி தரையிறக்கியது. இது இந்தியாவிற்கு மிக பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் இந்தியாவிற்கு எதிரான நகர்வாக கருதப்படுகின்றது. தெற்காசியாவில் நிரந்தரமாக காலூன்றுவதற்கு அமெரிக்கா நீண்டகாலமாக முயன்ற நிலையில் டிட்வா பேரிடர் அதற்கான சாத்தியத்தை வழங்கியுள்ளது என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். மேற்கு நாடுகள் பேரிடர் காலங்களில் உதவ செல்வதை போன்று அங்கு நிரந்தரமாக காலூற்றும் தன்மையை கொண்டுள்ளது. இதை வெளிப்படுத்தும் நோக்காகவே இலங்கைக்கு அமெரிக்கா தனது விமானங்களை அனுப்பி சோதனையிட்டது என அரசியல் ஆய்வாளர்களால் கூறப்படுகின்றது.
எனவே மீனவர் பிரச்சினை என்பது வெறுமனே ஒரு பொருளாதாரப் பிரச்சினை அல்ல அது வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், இலங்கையின் கடற்சார் இறையாண்மையையும் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினையாகும். இந்தப் போராட்டமானது, இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய-இலங்கை உறவில் ஒரு புதிய மற்றும் சவாலான அத்தியாயத்தைத் திறந்துள்ளது. இந்தப் பிரச்சினை இராஜதந்திர ரீதியில் உடனடியாகத் தீர்க்கப்படாவிட்டால், அது வடக்கு மக்கள் மத்தியில் இந்தியாவின் செல்வாக்கை குறைப்பதுடன், சீனா, அமெரிக்கா போன்ற மற்ற வல்லரசுகள் வடக்கு அரசியலில் நேரடியாகத் தலையிடுவதற்கான வாய்புக்களை திறந்துவிடும் ஒரு முக்கிய மான இராஜதந்திர நெருக்கடியாக மாறக்கூடும். இந்தப் போராட்டமானது, இந்தியாவின் இராஜதந்திர நகர்வுகளைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பது, வெறுமனே மீன்வளம் தொடர்பான விடயமாக மட்டும் அமையாமல், பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் நீண்டகால நலன்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். இதுவரை காலமும் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண தவறிய இந்தியாவிற்கு இந்த போராட்டம் வடக்கு மக்களிற்கு இந்தியாவிற்கு எதிரான மனநிலையையும், நம்பக தன்மையையும் ஏற்படுத்தியுள்ளதோடு பூகோள அரசியல் மற்றும் இராஜதந்திர சவால்களையும் வளங்கியுள்ளது.
–தில்லையம்பலம் டிலக்சன்.
(இக்கட்டுரை 29 டிசம்பர் 2025 (திங்கள்) தினக்குரல் பத்திரிகையில் கருத்துக்களம் பகுதியில் பிரசுரிக்கப்பட்டது.)
....நன்றி தினக்குரல்....

Comments
Post a Comment