ஜனநாயகத்தின் கழுத்தில் தொங்கும் வாளாக பயங்கரவாத தடைச் சட்டம். தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
ஜனநாயகத்தின் கழுத்தில் தொங்கும் வாளாக பயங்கரவாத தடைச் சட்டம். தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
தி. டிலக்சன்
இலங்கையில் பல தசாப்தங்களாக ஜனநாயகத்தின் கழுத்தில் தொங்கும் வாளாகப் பயங்கரவாத தடைச் சட்டம் இருந்து வருகிறது. இந்தச் சட்டம் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டாலும் அரசியல் எதிர்ப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், அப்பாவி மக்கள் மற்றும் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த வரலாறு மிகவும் கசப்பானது. இத்தகைய சூழலில் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பிறகு இந்தச் சட்டத்தை நீக்குமா அல்லது அதே பழைய வழியில் அதனைத் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்துமா என்ற கேள்வி அனைத்துத் தரப்பினராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.
இது வெறுமனே சட்டரீதியான விவாதம் அல்ல மாறாக இலங்கையின் எதிர்கால ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு கேள்வி.இது பற்றிய விவாதங்கள் தற்காலத்தில் தொடர்ச்சியாக தெசிய மட்டத்தில் மட்டுமின்றி சரவதேச மட்டத்திலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
பயங்கரவாத தடைச் சட்டம் 1979ஆம் ஆண்டில் இலங்கையில் கொண்டுவரப்பட்டது. தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இது தற்காலிகச் சட்டமாகவே அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 1982ஆம் ஆண்டில் இது நிரந்தரச் சட்டமாக மாற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதுமாகும்.
ஆனால் இந்தச் சட்டம் நடைமுறையில் பல கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது. ஏனெனில் அது ஒரு சந்தேக நபரை நீதிபதி முன் நிறுத்தாமல் 18 மாதங்கள் வரை தடுப்புக் காவலில் வைக்க அனுமதிக்கிறது. அத்துடன் பொலிஸ் அதிகாரிகளால் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சாட்சியாக ஏற்றுக்கொள்ளுதல், பிணை வழங்குவதில் உள்ள சிக்கல்கள், மற்றும் சித்திரவதை தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்ற பல அம்சங்கள் மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானவையாகக் கருதப்படுகின்றன.
தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
தேசிய மக்கள் சக்தி மற்றும் அதன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளனர். அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்தச் சட்டத்திற்குப் பதிலாக மனித உரிமைகளை மதிக்கும் ஒரு புதிய வலுவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதாகக் குறிப்பிட்டிருந்தனர் மேலும் ஆகஸ்ட் 7, 2025 அன்று பாராளுமன்ற அமர்வின்போது ஜனாதிபதி, “பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதே தேசிய மக்கள் சக்தியினுடைய நிலைப்பாடு” எனத் தெரிவித்தார். இந்த வாக்குறுதி பயங்கரவாத தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையை தற்போது ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சட்டம் நீக்கப்பட்டால் அது இலங்கையின் ஜனநாயக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதில் உள்ள சிக்கல் என்ன?
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது என்பது எளிதான காரியமல்ல. இதற்குப் பல சவால்கள் உள்ளன. முதலாவதாக இலங்கையில் பயங்கரவாதம் குறித்த அச்சம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. ஈஸ்டர் தாக்குதல்கள் போன்ற நிகழ்வுகள் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை என்பதை நினைவூட்டுகின்றன. இந்தச் சூழலில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற வாதங்கள் வலுப்பெறக்கூடும்.
இரண்டாவதாக சர்வதேச சமூகத்தின் அழுத்தம் ஒருபுறம் இருந்தாலும் சில உள்நாட்டு அரசியல் சக்திகள் மற்றும் பேரினவாதிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தைத் தொடர வேண்டும் என்று வாதிடலாம். சில தேசியவாத சக்திகள் பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் சட்டங்கள் தேவை என்று வலியுறுத்தலாம் மற்றும் சிறு பான்மை சமூகத்தவரை ஒடுக்குவற்குள்ள சிறப்பான கருவியாக இதை பயன்படுத்தலாம்.இவ்வாறான விடயங்கள் தடையாக காணப்படுகின்றன.
தற்போதைய அரசாங்கம் இச் சட்டத்தை நீக்குமா அல்லது தமது அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துமா?
தற்போதைய அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கும் நடைமுறைக்கும் இடையிலான இடைவெளி கவலையளிப்பதாக உள்ளது.இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்தப்படும் சாத்தியங்கள் இந்த அரசாங்கத்திலும் தொடர்கின்றன. உதாரணத்துக்கு கடந்த மாதங்களில் இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கரை வாகனத்தில் ஒட்டியதற்காக ஒரு இஸ்லாமிய இளைஞர் கைது செய்யப்பட்டது மற்றும் ஊடகவியலாளர் குமணனைப் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தொடர்ச்சியாக அச்சுறுத்தி விசாரணைக்கும் அழைத்து இருப்பது இந்த பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஆகும். இவ்வாறான இன்னும் பல எதிர்பு நடவடிக்கைகள் தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நடவடிக்கைகள் தனி மனித சுதந்திரத்திற்கும், மனித உரிமை மற்றும் ஊடக சுதந்திரத்திற்கும் எதிரான அடக்குமுறையாகவே பார்க்கப்படுகிறது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்தை எட்டியிருக்கும் நிலையில் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவது தொடர்பில் குறிப்பிட்டாலும் இச் சட்டத்தை அரசியல் ஆயுதமாக தமது ஆட்சி காலத்திலும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றமையை காண கூடியதாக உள்ளது.
இந்தச் சட்டத்தை தற்போதைய அரசாங்கம் நீக்குவது என்பது எளிதான காரியமல்ல. இதற்குப் பல சவால்கள் உள்ளன. தேசிய பாதுகாப்பு குறித்த வாதங்கள் மற்றும் சில உள்நாட்டு அரசியல் சக்திகளின் எதிர்ப்பு போன்றவை அரசாங்கத்தின் முடிவை பாதிக்கலாம். இந்த அரசாங்கம் இந்தச் சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக அதில் சில திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை மட்டும் சமாளிக்கலாம். ஆனால் அது முழுமையான தீர்வாக அமையாது.கடந்த அரசாங்கங்களால் பல தமிழ் கைதிகள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் பல ஆண்டுகளாக தண்டனைக்குள்ளாக்கப்படு வருகின்றனர். இவர்களுக்கு தற்போதைய அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இருப்பினும் இந்தச் சட்டத்தை முழுமையாக நீக்காமல் அதைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் அது மீண்டும் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் இன்னும் நிலவுகிறது. குறிப்பாக அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக வலுவான எதிர்ப்பு ஏற்படும்போது இந்தச் சட்டம் மீண்டும் அரசியல் ஆயுதமாக மாறக்கூடும். அத்தகைய சூழ்நிலையில் மக்கள் மீண்டும் துன்புறுத்தப்படுவார்கள் என்ற பயம் நியாயமானது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது என்பது வெறும் சட்டரீதியான மாற்றம் மட்டுமல்ல அது ஒரு அரசியல் விருப்பம். புதிய அரசாங்கம் இந்தச் சட்டத்தை நீக்குவதன் மூலம் மக்கள் மத்தியில் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வளர்க்க முடியும். அதேசமயம் இந்தச் சட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டால் அது கடந்தகால அரசாங்கங்கள் செய்த தவறுகளையே மீண்டும் செய்வதாக அமையும்.
எனவே தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த மாற்றம் நடைமுறையில் எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பதைப் பொறுத்துதான் அதன் வெற்றி அமையும். புதிய அரசாங்கம் இந்தச் சட்டத்தை நீக்கி மனித உரிமைகளை மதிக்கும் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவரும்போதுதான் இலங்கை பயங்கரவாத சட்டத்தின் நிழலில் இருந்து முழுமையாக விடுபடும். அதுவரை இந்தச் சட்டம் சிறுபான்மை சமூகத்தையும், ஊடக சுதந்திரத்தையும், தனிமனித சுதந்திரத்தையும், மனித உரிமையையும் மற்றும் ஜனநாயகத்தையும் கேள்விக்கு உட்படுத்தும் ஒன்றாகவே காணப்படும். இந்த அரசாங்கம் இந்தச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஒரு புதிய அத்தியாயத்தைத் திறக்குமா அல்லது பழைய புத்தகத்தின் பக்கங்களையே மீண்டும் வாசிக்குமா என்பதை வரும் காலமே தீர்மானிக்கும்.
“சட்ட திருத்தம் முழுமையான தீர்வு அல்ல சட்ட நீக்கமே முழுமையான தீர்வு”
(இக்கட்டுரை 13 august 2025 தமிழ்mirror பத்திரிக்கையில் கட்டுரை பகுதியில் பிரசுரிக்கப்பட்டது.)
(..நன்றி தமிழ்mirror)

.jpeg)
Comments
Post a Comment